சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை..!

டெல்லி: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகனான எம்பி கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக புகார் எழுந்தது. அதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனை தொடர்ந்து அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். அவர் வரும் 27ம் தேதி (நாளை மறுநாள்) வரை சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில், லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தார். ஏற்கனவே லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய 16 மணி நேரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், இன்று டெல்லி திரும்பிய கார்த்தி சிதம்பரம், பிற்பகலில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பாஸ்கர ராமனிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரிடம் விசாரிக்க வாய்ப்புள்ளது.

பின்னர் அவருக்கு சிபிஐ நோட்டீஸ் வழங்கும்; அல்லது அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்யவும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே, சிபிஐ குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக கார்த்தி சிதம்பரம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விசா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக அவர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது. விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.

Related Stories: