படையெடுக்கும் பாம்புகளால் பர்மா காலனி மக்கள் பரிதவிப்பு-கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

சிவகாசி : சிவகாசி அருகே பர்மா காலனியில் புதர்மண்டிக் கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பாம்புகள் படையெடுப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் பர்மா காலனி உள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதி அடிப்படை வசதிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மெயின் ரோட்டில் இருந்து காலனிக்குள் செல்லும் நுழைவு பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பராமரிப்பின்றி காணப்படுவதால் புதர்மண்டிக் கிடக்கின்றது. இங்குள்ள வீடுகளில் முறையான கழிவுநீர் சேகரிப்பு அமைப்பு இல்லை. இங்கு அமைந்துள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக மழைநீர் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், இப்பகுதியில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரால் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அடிக்கடி மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. தற்போது இந்தக் கால்வாய்கள் பராமரிப்பு இல்லாமல் பல இடங்களில் புதர் மண்டியும், குப்பைகளால் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசிவருகிறது.

புதர்மண்டிக்கிடக்கும் கால்வாய் பகுதியில் உள்ள பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி செல்கின்றது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, கழிவுநீர்க் கால்வாய்களை ஊராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், புதை சாக்கடைத் திட்டத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: