சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.35 குறைந்தது: மக்கள் மகிழ்ச்சி..!

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.35 குறைந்து ரூ.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தொடந்து 3 நாட்களாக தக்காளி விலை உயர்ந்துவந்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 79 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். இதுபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலையை குறைக்க தமிழக அரசு கடும் முயற்சி எடுத்து வந்தார். அதன் அடிப்படையில் நேற்று ரூ.99 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.65-ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.63க்கு விற்பனை செய்யபப்டுகிறது. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்எஸ்.முத்துக்குமார் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ தக்காளி 110க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள், இல்லதரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது அதிகாரிகள், வியாபாரிகளின் குறைகளை கேட்டு உடனடியாக நிவர்த்தி செய்து வருகின்றனர். எனவே, முதல்வர் ஸ்டாலினுக்கு அனைத்து வியாபாரிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு கூறினார். 

Related Stories: