ஹெல்மெட் அணிவது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

கோத்தகிரி : ஹெல்மெட் தங்களின் உயிர் கவசம் என்பதை மனதில் கொண்டு அணிய வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் ஹெல்மெட் அணிவது குறித்து கோத்தகிரி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் என்பதால் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர். மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்காக வரும்  இருசக்கர  வாகன ஓட்டிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறித்தும், முறையாக ஹெல்மெட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மலைப்பாதையில் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிலும் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, ஹெல்மெட் முறையாக அணிய வேண்டும். போலீசாருக்காக ஹெல்மெட் அணியாமல் தங்களுக்கான உயிர் கவசம் என்பதை மனதில் கொண்டு அணிய வேண்டும்.

போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும், வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும், வளைவுகளில் முந்த கூடாது, வேகமாக வாகனத்தை இயக்க கூடாது என கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், எஸ்ஐ ஜான் தலைமையிலான போலீசார், உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: