கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது-கண்காட்சி நேற்றுடன் நிறைவு

ஊட்டி : கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை மலர் கண்காட்சியை காண ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆண்டு தோறும் கோடை காலங்களில் சமவெளிப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து விடுபடவும், அதே சமயம், கோடையை குளிர்ச்சியாக கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகின்றன. குறிப்பாக, ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சியே முக்கிய கோடை விழாவாக கருதப்படுகிறது.

இதனை காணவே, பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவது வழக்கம். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பல லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.மலர் கண்காட்சி நடக்கும் ஐந்து நாட்கள் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். எங்கு பார்த்தாலும், சுற்றுலா பயணிகளும், அவர்களின் வாகனங்களுமே காணப்படும். இந்த ஐந்து நாட்களில் உள்ளூர் மக்கள் தங்களது சொந்த வேலைகளை கூட பார்க்க முடியாத அளவிற்கு சுற்றுலா பயணிகள் தொல்லை இருக்கும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. காரணம், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது, உணவு பொருட்களின் விலை உயர்வு, போதிய பார்க்கிங், அடிப்படை வசதிகள் இல்லாததே. இதனால், மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்துக் கொண்டே செல்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு மலர் கண்காட்சி நடந்த ஐந்து நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வந்துள்ளனர். ஆனால், இம்முறை கடந்த ஐந்து நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கூட வரவில்லை. மலர் கண்காட்சி துவங்கிய 20ம் தேதி 12 ஆயிரத்து 774 பேரும், 21ம் தேதி 19 ஆயிரத்து 513 பேரும், 22ம் தேதி 27 ஆயிரத்து 259 பேரும், 23ம் தேதி 21 ஆயிரத்து 540 பேரும் என மொத்தம் நான்கு நாட்களில் 81 ஆயிரத்து 86 பேர் வந்துள்ளனர்.

நேற்று சுமார் 15 ஆயிரம் பேர் வரை வந்திருக்க வாய்ப்பு இருந்த நிலையில், இம்முறை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் 50 ஆயிரம் பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடக்காத நிலையில், இம்முறை மலர் கண்காட்சியை காண அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ேதர்வு நடக்கும் நிலையில், மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

மலர் அலங்காரம் மேலும் சில நாட்களுக்கு வைக்க முடிவு

மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்காவில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் ஆன வேளாண் பல்கலைக்கழக கட்டிடத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டிருந்தது. இது தவிர, 2 ஆயிரம் மலர்களை கொண்டு ஊட்டி 200, நீலகிரியில் வாழும் பழங்குடியினர் உருவ பொம்கைள் என பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் மாடங்களில் பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் அலங்காரங்களை கடந்த ஐந்து நாட்களாக ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.  

இந்நிலையில், துவக்கத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைந்த காணப்பட்ட போதிலும், கடைசி மூன்று நாட்கள் ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை பார்ப்பது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு பூங்காவில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், இம்மாதம் இறுதி வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.

விஐபிக்கள் வருகையும் காரணம்

ஊட்டியில் கோடை சீசன் துவங்கிவிட்டாலே கவர்னர், முதல்வர் மற்றும் ஜனாதிபதி என மே மாதம் முழுவதும் விஐபிக்கள் ஊட்டி வருகின்றனர். இது போன்ற சமயங்களில், விஐபிக்களின் வாகனங்கள் (கான்வாய்) செல்ல அனைத்து சாலைகளையும் போலீசார் அடைப்பதால், சில சமயங்களில் 2 மணி நேரம் வரை சுற்றுலா பயணிகள் வாகனங்களில் காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே, இது போன்று விழா சமயங்களில் நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்க ஊட்டிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்கின்றனர்.

Related Stories: