சத்துவாச்சாரி வள்ளலாரில் சாலையில் அமைத்திருந்த தனியார் செப்டிக் டேங்க் அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைப்பு-பொதுமக்கள் கடும் அதிருப்தி

வேலூர் : சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் சாலையில் அமைத்திருந்த தனியார் செப்டிக் டேங்க் அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் கால்வாய், ஸ்மார்ட் சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வள்ளலார் பகுதியில் இருபுறங்களிலும் 100க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் இந்த பகுதி பரபரப்பாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் காணப்படும்.

இந்நிலையில்  இருப்புறங்களிலும் கடந்த சில மாதங்களாக மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கும் இடத்தை அளவீடு செய்யாமல் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக வள்ளலாரில் தனியார் கட்டத்திற்கு சொந்தமான செப்டிக் டேங்க் சாலையில் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது அந்த செப்டிக் டேங்க் வெளியே தெரிந்தது.

எனவே செப்டிக் டேங்கை அகற்றிவிட்டு கால்வாய் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் சில வாரங்களாக செப்டிக் டேங்கை அகற்றாமல் கால்வாய் கட்டும் பணியை நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது திடீரென செப்டிக் டேங்கை அப்படியே விட்டு விட்டு அதன் மீது கான்கீரீட் தளம் போட்டு மூடி உள்ளனர். இதனால் மழை நீர் செல்ல அமைக்கப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பல லட்சங்கள் செலவு செய்து மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றாமல் பெயரளவுக்கு மட்டும் அகற்றி உள்ளனர். தனியார் கட்டிடங்களுக்கு சொந்தமான செப்டிங் டேங்க் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த டேங்க் அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர். மேலும் அதன்மீது மழைநீர் கால்வாய் கட்டி உள்ளனர்.

 வரும் காலங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலும் அதை அகற்றுவது பெரும் பிரச்னையாகிவிடும். இதை அதிகாரிகளும் சரியாக கண்காணிக்கவில்லை. பல ஆண்டுகளாக இருக்கும் மழைநீர் கால்வாய் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும் என்று எண்ணி இருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது. இதை மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆய்வு ெசய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: