வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 6 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

வேலூர் : வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 6 கிலோ புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக டீன் செல்வி கூறினார்.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி டீன் செல்வி கூறியதாவது: அணைக்கட்டு அடுத்த  இறையூர் கிராமத்தை சேர்ந்த சந்திரன். இவரது மனைவி அவராஞ்சி(55). இவர் உடல்நல குறைவின் காரணமாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவுக்கு வந்தார்.

அவருக்கு வயிறு வீக்கம், வாந்தி, பசியின்மை மற்றும் உடல் எடைகுறைவு ஆகிய உபாதைகள் 3 மாதங்களாக இருந்து வந்துள்ளது.அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ரத்த பரிசோதனை, எக்கோ, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு அவருக்கு ரெட்ரோ பெரிடோனியல் லைபோ சார்கோமா எனப்படும் மிகப்பெரிய புற்றுநோய் கட்டி உள்ளது என்பதையும் சிறுநீரகம், சிறுநீர் குழாய், வயிற்றுப்புற மகாதமனி மற்றும் பிற ரத்த குழாயை சூழ்ந்துள்ளது என்பதையும் கண்டறிந்தனர்.

மருத்துவகுழுவினர் அவராஞ்சிக்கு 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் 6  கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி முழுமையாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர்  2 நாட்கள் செயற்கை சுவாசத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் சுவாச பயிற்சி ஆரம்பித்து, மஞ்சள் ரத்தம், சிகப்பு ரத்தம் ஏற்றி முழுமையாக குணமடைய செய்தனர். பல லட்சம் ருபாய்  செலவாகக்கூடிய இந்த அறுவை சிகிச்சையை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்  மூலமாக இலவசமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினருக்கு அவராஞ்சி குடும்பத்தினர் நன்றி கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: