இறந்தவரை உயிரோடு இருப்பதாக கூறியதாக குற்றச்சாட்டு மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல்-பரமக்குடியில் பரபரப்பு

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முத்துசெல்லாப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி (42). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு முத்துசெல்லாப்புரம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தார். இதில் ஆட்டோ கவிழ்ந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரவு 12 மணியளவில் அந்தோணிசாமி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் முதலுதவி  சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறந்தவரை உயிரோடு இருப்பதாக கூறி மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்கினர்.

இதில் அங்கிருந்த கண்ணாடி, இருக்கைகள் சேதமடைந்தன. இதனையடுத்து ஏடிஎஸ்பி அருண், பரமக்குடி தாசில்தார் தமீம்ராஜா, டிஎஸ்பி திருமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறையாக சிகிச்சை அளிக்காததால் அந்தோணிசாமி உயிரிழந்ததாகவும், உரிய நஷ்டஈடு கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தோணிசாமியின் உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருதரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: