×

கடும் பொருளாதார நெருக்கடி... நிதியமைச்சர் பதவியை யாரும் ஏற்கவில்லை: நிதித்துறை பொறுப்பையும் ஏற்றார் பிரதமர் ரணில்!!

கொழும்பு : இலங்கையில் 2 மாதத்திற்கும் மேல் மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த 9ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். 4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி போராட்டம் நீடித்து வருகிறது.

இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேபுதிய அமைச்சரவையில் ஒவ்வொரு கட்டமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் இருந்து மீட்க திட்டம் வகுக்க வேண்டிய நிதியமைச்சர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. பல்வேறு நிதிகளை ஒப்புதல் அளிக்க வேண்டிய முக்கியமான துறை என்பதால், தன்னுடைய  தீவிர ஆதரவாளருக்கே கொடுக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்பட்டது. மேலும் நிதித்துறைக்கு அமைச்சர் நியமிக்கும் வரை, அதிபர் கோத்தபயவே கூடுதலாக நிதித்துறையை கவனிப்பார் என்று அமைச்சரவை செய்தி தொடர்பாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்து இருந்தார்.

இதனிடையே நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் சார்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், இலங்கை நிதியமைச்சர் பொறுப்பை அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஏற்றார்.நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ரணில் விக்ரமசிங்கே நிதியமைச்சராக பதவியேற்றார்.  



Tags : Finance Minister ,Ranil , Minister of Finance, Position, Finance, Prime Minister, Ranil
× RELATED ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை...