கப்பல் போக்குவரத்தை தடுத்து மீனவர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

சென்னை: சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் 2-வது நாளாக கடல் மார்க்கமாக போராட்டம் நடத்திவிட்டுட்டு கரை திரும்பிய மீனவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டும் தளம் அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு வங்கக்கடல் ஓரத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1750 மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக கப்பல் உள்ளே மற்றும் வெளியே செல்லாதவாறு கடல்மார்க்கமாக போராட்டம் நடைபெற்றது. தற்காலிகமாக கரை திரும்பிய மீனவர்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை முடிவுகளின் அடிப்படையில் போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 2 நாள் போராட்டத்தில் பழவேற்காடு, லைட்அவுஸ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.

அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை நிறுத்த வேண்டும், பழவேற்காட்டிலிருந்து காமராஜர் துறைமுகம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதும் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Related Stories: