திருப்பூரில் பெண், 2 சிறுவர்களை அடித்து கொன்றது கள்ளக்காதலன்-4 தனிப்படைகள் அமைப்பு

திருப்பூர் : திருவாரூர் குடவாசலை சேர்ந்தவர் முத்துமாரி (38). இவர் தனது மகன்கள் தர்னீஷ் (9), நித்திஷ் (6) ஆகியோருடன் திருப்பூர் அருகே வாவிபாளையம், சேடர்பாளையம் அரசு பள்ளி வீதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் 3 பேரும் கொலை செய்யப்பட்டனர்.தகவலறிந்த திருப்பூர் போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் அபிநவ்குமார், அனுப்பர்பாளையம் சரக உதவி கமிஷனர் நல்லசாமி, திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பதுருன்னிசாபேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துமாரி மற்றும் 2 மகன்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

முத்துமாரியின் தலையை தரையில் மோதியும், மகன்களை இரும்பு ராடால் தலையில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. 3 பேரையும் கொன்றது யார்? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் 3 பேரையும் கொலை செய்தது முத்துமாரியின் கள்ளக்காதலனான குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்பது தெரியவந்துள்ளது.

கொலையுண்ட முத்துமாரிக்கும் குடவாசலை சேர்ந்த கணேசனுக்கும் கடந்த 2012 ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முத்துமாரியை விட்டு கணேசன் பிரிந்து திருச்சியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்தார்.

குழந்தைகள் முத்துமாரியிடம் இருந்தன. குழந்தைகளை வளர்க்கும் பொருட்டு திருப்பூருக்கு வேலை தேடி வந்த முத்துமாரி எஸ்.ஆர். நகரில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் தங்கி பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த கோபாலுடன் முத்துமாரிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.இதையடுத்து சேடர்பாளையம் அரசு பள்ளி வீதியில் உள்ள வாடகை வீட்டில் முத்துமாரியையும், 2 குழந்தைகளையும் கோபால் தங்க வைத்தார். வீட்டின் உரிமையாளர் பத்மாவதியிடம் 1 மாதம் மட்டும் வாடகைக்கு வீடு கொடுக்குமாறு கேட்டு அவர்களை கோபால் அங்கு தங்க வைத்துள்ளார். கோபாலும் அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

இந்த நிலையில் முத்துமாரியின் நடத்தையில் கோபாலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில்தான் முத்துமாரியையும், அவரது 2 மகன்களையும் கோபால் அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கோபாலுக்கு 2012ல் திருமணமாகியுள்ளது. வழக்கு ஒன்றில் அவர் 7 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர் ஆவார். தற்போது 3 பேரை கொலை செய்த வழக்கில் அவரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  கோபாலின் செல்போன் எண்ணை கண்காணித்தபோது, கூலிபாளையம் பகுதியையும், பின்னர் படியூர் பகுதியையும் டவர் காட்டியது. அதை வைத்து போலீசார் அவரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சடலம் பெற உறவினர்கள் மறுப்பு

கொலை செய்யப்பட்ட முத்துமாரி, 2 சிறுவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். ‘‘எங்கள் அறிவுரையை ஏற்காமல் திருப்பூருக்கு வந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்துள்ளார். எங்களுடன் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை இல்லாமலும் இருந்தார். எனவே நாங்கள் சடலத்தை வாங்க மாட்டோம்’’ என அவர்கள் கூறியதாக தெரிகிறது. முத்துமாரி மற்றும் 2 சிறுவர்களின் பிரேத பரிசோதனை முடிந்து உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. உறவினர்களை சமாதானப்படுத்தி சடலங்களை வாங்க வைக்க திருமுருகன் பூண்டி போலீசார் திருவாரூக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: