×

வெளித் தெரியா வேர்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘மன்னிக்க வேண்டும். எவ்வளவோ முயன்றும் தங்கள் கணவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை..!”  என மருத்துவர் சொல்லிச் சென்றபோது, இருபத்து மூன்றே வயதான அந்த ஏழை இளம்பெண்ணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  தாங்கமுடியாத வயிற்றுவலி என்று மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதும் கணவர் உயிரிழப்பார் என்று நினைக்காததால் அதிர்ந்துபோய் நின்றார் சுபாஷினி. கால்களைச் சுற்றி அழுதுகொண்டிருந்த அவரின் நான்கு குழந்தைகளையும் கட்டி அணைத்து அவர் கண்கள் கலங்க ஆரம்பித்தாலும் மனம் மட்டும் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தது.

சுபாஷினி என்கிற சுபாஷினி மிஸ்திரி, 1943-ல் கொல்கத்தா அருகில் உள்ள குல்வா என்கிற கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பிறந்தவர். இவரையும் சேர்த்து உடன் பிறந்தவர்கள் 14 பேர். பெற்ற குழந்தைகளுக்கு சரியாக உணவளிக்க முடியாத சுபாஷினியின் தந்தை 12 வயதிலேயே ஹன்ஸ்புகூரைச் சேர்ந்த விவசாயி சதன் சந்திரா என்பவருக்கு சுபாஷினியைத் திருமணம் செய்து கொடுக்க, வீடுதான் மாறியதே தவிர வாழ்க்கை மாறவில்லை சுபாஷினிக்கு.

வருமானம் பற்றாத நிலையில் இன்னும் நான்கு குழந்தைகளும் சேர, வாட்டி எடுத்த வறுமையில் இருந்து விடுபட, அருகில் இருந்த வீடுகளில் வீட்டு வேலை செய்யத் தொடங்கினார். இந்த நிலையில்தான் குடல் அழற்சி காரணமாக இளம் கணவனையும் இழந்தார். முற்றிலும் படிப்பறிவு இல்லாத சுபாஷினிக்கு, தனது நான்கு குழந்தைகளின் வயிற்றை நிரப்ப வேண்டிய கட்டாயம். கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.

வீட்டு வேலை, தோட்ட வேலை, செருப்பு தைப்பது, செங்கற்சூலை எதையும் அவர் விட்டு வைக்கவில்லை. இறுதியாக அருகிலுள்ள தாபா என்ற கிராமத்தில், காய்கறிகளை விற்கத் தொடங்கினார். வருமானம் சற்றே அதிகரித்தது என்றாலும் குழந்தைகளின் வயிற்றுப்பசியை மட்டுமே அந்த சொற்ப வருமானம் போக்கியது. அந்த சமயத்திலும் அவர் மனதில் வேறொரு எண்ணம் குடிகொள்ள ஆரம்பித்திருந்தது. ‘ஏழை என்பதால் தானே மருத்துவம் பார்க்க முடியாமல் என் கணவர் இறந்தார். இனி இந்த கிராமத்தில் எவரும் வசதியில்லை என்ற காரணத்தால் மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்கக் கூடாது’ என்பதே அது.

பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருக்க, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பெரும் சவாலாய் இருந்தது சுபாஷினிக்கு. மீறிக் குழந்தைகளை அனுப்பினாலும், அவர்களின் அழுக்கு உடைகளைக் கண்டு, ‘குப்பை குழந்தைகள்’ என அழைக்கப்பட, குழந்தைகளைப் பிரிந்திருப்பது என்ற தீர்க்கமான முடிவை எடுத்தார் சுபாஷினி. தனது இரு மகன்களையும் அருகில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் சேர்த்துவிட்டு, மகள்களுடன் காய்கறி விற்பனையைத் தொடர்ந்தார் சுபாஷினி.

சுபாஷினி மிஸ்திரி நினைத்தது போலவே, இளைய மகன் அஜய் மிஸ்திரி பள்ளிப்படிப்பை அதிக மதிப்பெண்களுடன் முடித்ததோடு, மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்விலும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றார். ஜெர்மன் நிறுவனம் ஒன்றின் உதவித்தொகையுடன், கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலத் தொடங்கினார். அஜய் மிஸ்திரியின் மூத்த சகோதரர் தந்தை விட்டுச்சென்ற விவசாயத்தில் ஈடுபட, சகோதரிகள் இருவருக்கும் திருமணம் நடந்தேற, தாய் சுபாஷினி மட்டும் மருத்துவமனை ஒன்றை உருவாக்குவது என்ற அவரின் பெருங்கனவை நிறைவேற்றும் வேகத்துடன் தனது காய்கறி வியாபாரத்தை தொடர்ந்தார்.

‘காய்கறி வியாபரத்தில் பணத்தை எண்ணத் தெரியாத உனக்கு மருத்துவமனை கட்ட ஆசையா’ என அருகில் இருந்தவர்கள் அவரைப் பார்த்து சிரித்தபோதும் அசரவில்லை சுபாஷினி. சரியாக இருபது வருடங்கள். இரவு பகலாய் உழைத்து சேர்த்த ஒரு லட்சம் ரூபாயில் ஒரு ஏக்கர் நிலத்தை, தான் வசித்த ஹன்ஸ்புகூர் கிராமத்தில்  1992 ல் வாங்கினார்.

மகன் டாக்டர் அஜய் மிஸ்திரி இளநிலை மருத்துவம் முடித்து, பொதுமருத்துவத்தில் மேற்படிப்பு பயிலத் துவங்கும்போது சுபாஷினியின் கனவு மெய்ப்பட்டது. 1993 ல், தன் சேமிப்பில் இருந்த மிச்சப் பணத்தில் அவர் கட்டிய இருபதுக்கு இருபது அளவு கொண்ட ஒரு சிறு ஓலைக் குடிசையில் ‘மனிதநேய மருத்துவமனை’ (Humanity Hospital) எனும் அவரது கனவு மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. முதல் நாள் மட்டுமே அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 252.

‘பிச்சை எடுத்தாவது என் மகனை மருத்துவராக்க வேண்டும் என ஒருநாள் சபதம் எடுத்தேன். என் மகன் எனது கனவை நிறைவேற்றிவிட்டான்’ என்ற அந்த தாயின் விருப்பத்தை மேலும் நிறைவேற்ற, டாக்டர் அஜய் மிஸ்திரி இரவு பகல் பாராது உழைத்தார். பத்து பைசா சப்போட்டா பழத்திற்காக அடித்து விரட்டப்பட்ட சிறுவன்,  இன்று விரட்டிய மக்களுக்காக மனித நேயத்தோடு மருத்துவ சேவை புரிந்தான்.

தன் மகன் மட்டுமின்றி தனது மகனுக்கு மருத்துவம் பயிற்றுவித்த பல்துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து வாரம் ஒருமுறை தனது கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கக் கேட்டுக்கொண்டார். சேவை பெருகப் பெருக, மருத்துவமனை நோயாளிகளுக்குத் தேவைப்படும் கட்டில், தள்ளுவண்டி (stretcher) போன்றவற்றை மற்றவர்களின் உதவியோடு வாங்கினார். பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்விற்காக தனியொரு பெண்ணாய் பலரிடத்திலும் உதவிகள் கேட்டுப் பெற்று, இயன்றவரை இலவச மருத்துவ உதவியினை வழங்க வகை செய்தார்.

இரண்டே ஆண்டில் தாய் மற்றும் மகனின் அயராத உழைப்பில் குடிசையாய் இருந்த மருத்துவமனை மூன்று மாடிக் கட்டிடமாக நிமிர்ந்தது. ‘எனது தாய்தான் எனக்கு எல்லாமும். இந்த மருத்துவமனை அவரின் அயராத உழைப்பு என்றால், அவரின் மன உறுதியே என் உந்துசக்தி’ எனக் கூறும் அஜய் மிஸ்திரிக்கும் அவரது அன்னை சுபாஷினியைப்போல் ஒரு கனவு இருந்தது. அதாவது ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நாட்களிலிருந்து, சுந்தரவனக் காடுகளில் மருத்துவ வசதி எட்டாக்கனியாக இருக்க, அங்கும் ஒரு மருத்துவமனையை நிறுவ எண்ணினார்.

2009ல் பெரும் புயல் பாதிப்பினால் அவதிப்பட்ட சுந்தரவனக்காடுகளின் கிராமமான சான்டிகச்சியில் மருத்துவ உதவிகள் தேவைப்பட, தங்களுடைய மனிதநேய மருத்துவமனையின் கிளை ஒன்றை தனது தாயின் ஆசியுடன் துவங்கினார்.  தற்சமயம் ஹன்ஸ்புகூர் கிராமம் மற்றும் சுந்தரவனக்காடுகள் என இரு இடங்களிலுமே Humanity Hospital அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.

நாற்பத்தி ஐந்து படுக்கை வசதி கொண்ட தன்னுடைய மருத்துவமனையில், இருபத்தி ஐந்து அறைகளை இலவசமாகவும், மற்றவை குறைந்த கட்டணத்திலும் செயல்படுவதாகக் கூறும் சுபாஷினி, சத்யமேவ ஜெயதே போன்ற நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைதான் மருத்துவமனை இயங்குவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது என நன்றியுடன் குறிப்பிடுகிறார்.

இவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, 2018ல் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ  விருது சுபாஷினி மிஸ்திரிக்கு வழங்கப்பட்டது. அம்பன் புயல் மற்றும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்கு தன் மகனோடு, மனிதநேய மருத்துவக் குழு, படகுகளில் மருந்துகள், மாஸ்க், சானிடைசர் மட்டுமின்றி, உணவையும் சுமந்து சென்று, 4000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றியுள்ளனர்.

‘சிகிச்சை வழங்க போதிய மருத்துவ வசதி இன்மையால் எனது கணவர் உயிரிழந்தார். கலங்கி நின்ற எனக்கு அப்போது தெரியாது. நான் என் மகனை மருத்துவராக்கி மருத்துவமனையும் கட்டுவேன் என்று. நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை துயரங்கள் நிறைந்தது என்றாலும், இன்று நிறைவாக உணர்கிறேன்’ என்பவர் இன்றும் தனது காய்கறி வியாபாரத்தைத் தொடர்கிறார்.ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்பதற்கு வாழும் சாட்சி சுபாஷினி மிஸ்திரி.

தொகுப்பு: சசித்ரா தாமோதரன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!