மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பரிதாபமாக பலியானார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா நவீனுக்கு சொந்தமானது. இந்த திருமண மண்டபத்தில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணமக்களின் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதன்பிறகு நடந்த விருந்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உணவு அருந்தினர். அப்போது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் வேறிடத்தில் இருந்து வாங்கிவந்து 4 பேர் லிப்ட் வழியாக ஏற்றிச் சென்றனர்.

அப்போது திடீரென லிப்ட்டின் ரோப் அறுந்து விழுந்ததில் கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் சீத்தல்(19) சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயமடைந்த மூவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(22) என்பவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: