வியாபாரிகளை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கூலி பிரச்னை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. இதுதொடர்பாக, கடந்த 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வியாபாரிகள் விரும்பும் ஆட்களை கொண்டு தங்களது உடமைகளை இறக்கி கொள்ளலாம். அதை தடுத்து நிறுத்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை. அப்படி நடந்தால் அதை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வியாபாரிகள் விரும்பும் பட்சத்தில், அவர்கள் கூலி தொழிலாளர்களை வைத்து, உடமைகளை இறக்கி கொள்ளலாம் என கடந்த 19.1.22 அன்று தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்ற உத்தரவால், சுமார் 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு தலையிட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் இரு தரப்பினரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி சுமுக உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை திரண்டனர். அங்கு திடீரென தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், அதிகாரிகள் வந்து சமரசம் செய்து வைத்தால் எங்களது போராட்டம் முடிவுக்கு வரும். இல்லாவிட்டால், நாளையும் (இன்று) தொடரும் என்றனர்.

Related Stories: