காப்புக்காடுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கிராமங்களுக்கு படையெடுக்கும் விலங்குகள்: வாகனங்கள் மோதி உயிரிழக்கும் அவலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் போதிய தண்ணீர் இல்லாததால், அங்கிருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு வரும் விலங்குகள், வாகனங்களில் சிக்கி பரிதாபமாக இறக்கின்றன. இதனை தடுக்க, காட்டு பகுதியில் குளம், குட்டை அமைத்து விலங்குகளின் தாகத்தை தணிக்க வேண்டும். அதன் உயிரிழப்புகளை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவில் மலைகள் மற்றும் காப்புக்காடுகள் உள்ளன. இந்த மலைகளிலும் காப்புக்காடுகளிலும் நிறைய மான்கள், குரங்குகள், மரநாய்கள் என சிறு விலங்குகள் வசிக்கின்றன.

இந்த காப்புக்காடுகளில் விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாலதால் தண்ணீரை தேடி காட்டை விட்டு, அருகில் உள்ள கிராமங்களுக்கு கூட்டமாக படையெடுத்து வருகின்றன. குறிப்பாக செங்கல்பட்டை சுற்றியுள்ள மலை மற்றும் காப்புக்காடுகளில் இருந்து விலங்குகள் வெளியே வருவதற்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளை கடக்க வேண்டும். தற்போது, செங்கல்பட்டில் உள்ள காப்புக்காட்டில் விலங்குகளுக்கான போதுமான உணவோ, தண்ணீரோ கிடைப்பதில்லை. அதனால் பெரும்பாலும் மான்கள், மரநாய்கள், குரங்குகள் உள்பட விலங்குள் காட்டைவிட்டு உணவு மற்றும் தண்ணீரை, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன. அதனால் மான்கள், மனிதர்களை பார்த்தும், வாகனங்களின் சத்தங்களையும் கேட்டு அச்சமடைந்து தறிக்கெட்டு ஓடி, வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன், செங்கல்பட்டு புலிப்பாக்கம் காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வந்த ஒரு மரநாய், புலிப்பாக்கம் பைபாஸ் சாலையை கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுபோல் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி குரங்குகள், மான், மரநாய் போன்ற விலங்குகள், அரிய பச்சோந்திகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.

சில நேரங்களில், மான்கள் கிராமங்களில் தண்ணீருக்காக வரும்போது, அங்குள்ள தெரு நாய்கள், கடித்து பரிதாபமாக துடிதுடித்து இறக்கின்றன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வனவிலங்குகள் காப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் காப்புக்காடுகளில் விலங்குகளின் பயன்பாட்டுக்கு ஒரு குளமோ, குட்டையோ உருவாக்கி, அதில் தண்ணீர் ஊற்றி, விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மரணத்தை தேடி ஊருக்குள் விலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: