பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் மெட்வதேவ்: பிளிஸ்கோவா முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் தகுதி பெற்றார். முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் பகுண்டோ பாக்னிசுடன் (32 வயது, 103வது ரேங்க்) நேற்று மோதிய மெட்வதேவ் (26 வயது, 2வது ரேங்க்) 6-2, 6-2, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. உள்ளூர் நட்சத்திரம் ரிச்சர்ட் காஸ்கே (35 வயது, 70வது ரேங்க்) தனது முதல் சுற்றில் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்காவின் லாயிட் ஹாரிசை (25 வயது, 39வது ரேங்க்) வீழ்த்தினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் ரோகன் போபண்ணா - மேத்யூ மிடில்கூப் (நெதர்லாந்து) ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்சின் வேயன்பர்க் - லூகா வான் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிபு முதல் சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை டெஸா ஆண்ட்ரியன்யாபிட்ரிமோவுடன் (23 வயது, 141வது ரேங்க்) மோதிய செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (30 வயது, 8வது ரேங்க்) 2-6 என முதல் செட்டை இழந்தாலும், பின்னர் சுதாரித்துகொண்டு விளையாடி 2-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். ஆலிஸ் கார்னெட், கரோலின் கார்சியா (பிரான்ஸ்), டேனியலி கோலின்ஸ், எலனா ரைபாகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: