எலிமினேட்டர் ஆட்டத்தில் இன்று ஆர்சிபி - லக்னோ பலப்பரீட்சை

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் லிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ-பெங்களூர் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த குஜராத் - ராஜஸ்தான் அணிகள் குவாலிபயர் 1 ஆட்டத்தில் நேற்று மோதிய நிலையில், 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று ‘எலிமினேட்டர்’ என்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன. குவாலிபயர் 1ல் வென்ற அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறிய நிலையில், தோற்ற அணி எலிமினேட்டரில் இன்று வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மோதுவதற்காக காத்திருக்கிறது. அறிமுக அணியான லக்னோ முதல் தொடரிலேயே  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. லீக் சுற்று முழுவதுமே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

ராஜஸ்தான் அணியின் கடைசி நேர எழுச்சியும், ரன்ரேட்டும் லக்னோ அணியை 3வது இடத்துக்கு தள்ளிவிட்டது. எனினும் இன்றைய ஆட்டத்தில் வென்று குவாலிபயர் 2ல் விளையாடும் முனைப்பில் லக்னோ அணி உள்ளது. அதே சமயம் டு பிளெஸ்ஸி தலைமையிலான பெங்களூர் அணியும் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து கோப்பையை முத்தமிட வரிந்துகட்டுவதால் லக்னோ அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக், ஹர்ஷல், மேக்ஸ்வெல், ஹேசல்வுட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் கோஹ்லி சிறப்பாக விளையாடியதும் ஆர்சிபி அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்காக மல்லுக்கட்டும் நிலையில், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: