பாமக சிறப்பு செயற்குழு கூட்டம் வரும் 28ம்தேதி நடக்கிறது: அன்புமணி தலைவராகிறார்? அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: பாமகவை அற்புதமாக ஜி.கே.மணி வழிநடத்தினார் என்று ராமதாஸ் புகழாரம் சூட்டினார். அதேநேரம் வரும் 28ம்தேதி பாமக சிறப்பு செயற்குழு கூட்டம் கூடுவதாக ஜி.கே.மணி அறிவித்தார். இந்த கூட்டத்தில் அன்புமணியை பாமக தலைவராக்குவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா பாமக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராவணன் வடிவேல், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் கலந்து கொண்டார். விழாவில் ஜி.கே.மணிக்கு தங்க பதக்கத்தை டாக்டர் ராமதாஸ் அணிவித்து கவுரவித்தார். விழாவில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,‘‘பாமக என்ற கட்சியை தொடங்கிய நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த கட்சியை ஜி.கே.மணியிடம் ஒப்படைத்தேன். அவரும் கட்சியை அற்புதமாக வழிநடத்தி வந்திருக்கிறார். நான் சொன்ன அனைத்தையுமே செய்து காட்டியுள்ளார். அவரை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை’’ என்றார்.

அதை தொடர்ந்து, அன்புமணி பேசுகையில், ‘‘இந்திய அளவில் தொண்டனுக்கு, கட்சி நிறுவனர் எடுக்கும் பாராட்டு விழா இதுவாக தான் இருக்கும். எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி ஆகியோரிடம் இருந்து அழைப்பு வந்தபோதும் கூட,  ராமதாஸ் மீது கொண்ட அளப்பறிய பற்றால் அவர் பாமகவில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். கட்சிக்கு கடுமையான சோதனை வந்தபோதெல்லாம் ராமதாசுக்கு உறுதுணையாக இருந்து போராடி இருக்கிறார். கலைஞர் கருணாநிதிக்கு கூட மனச்சோர்வு ஏற்பட்டால் ஜி.கே.மணியுடன் பேச விரும்புவார்’’ என்றார்.

* 28ம்தேதி சிறப்பு செயற்குழு கூட்டம்

ஜி.கே.மணி ஏற்புரையாற்றி பேசுகையில், ‘‘இந்த கட்சி தொடங்கியதில் இருந்து ராமதாசுடன் இணைந்து நான் பணியாற்றி கொண்டிருக்கிறேன். அவரின் நிழலாக இருந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. பாமக தலைமை சிறப்பு செயற்குழு கூட்டம் வரும் 28ம்தேதி( சனிக்கிழமை) அன்று திருவேற்காடு ஜி.பி.என். மாளிகையில் நடக்கிறது. கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’’ என்றார். இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்குவதற்கான அறிவிப்பு இந்த செயற்குழு கூட்டத்தில் இருக்கலாம் என்றும் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: