எந்த நாட்டின் முதலீடுகள் வந்தாலும் மோடியின் நண்பர்களுக்குதான் பயன்: திருமாவளவன் எம்பி குற்றச்சாட்டு

தூத்துக்குடி: எந்த நாட்டில் இருந்து அந்நிய முதலீட்டை  இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும் அது மக்களின் நலனுக்காகவும், நாட்டின்  வளர்ச்சிக்காகவும் அமையாது. மோடியின் நண்பர்களுக்குத்தான் அது பயன்தரும் என்று திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழங்கில் சிபிஐ விசாரணை அறிக்கை மக்களுக்கு நீதி வழங்காது என்பதால் தமிழக அரசு மீண்டும் அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். தமிழக பாஜ, அரசியல் செய்யும் களத்தை தேடுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை ஏற்றத்துக்கு முழு பொறுப்பு ஒன்றிய அரசுதான். கலால் வரி வசூலிப்பது ஒன்றிய அரசுதான். 200 சதவிகிதம் உயர்த்திவிட்டு மிக சொற்பமான முறையில் குறைத்து விட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விட்டதாக மக்களை பாஜ ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே 3 ரூபாய் வரை வரி குறைத்து உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்கு மோடி அரசின் பொருளாதார கொள்கை வழிவகுக்கிறது. எந்த நாட்டில் இருந்து அந்நிய முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும் அது மக்களின் நலனிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் அமையாது. மோடியின் நண்பர்களுக்குத்தான் அது பயன்தரும் என்றார்.

Related Stories: