இந்தியாவை பேச அனுமதிக்கும் அமைப்புகள் தாக்கப்படுகின்றன: இங்கிலாந்தில் ராகுல் பேச்சு

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் இந்திய மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘இந்திய மக்களை பேச அனுமதிக்கும் ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன’ என குற்றம்சாட்டினார்.

இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கார்பஸ் கிரிஸ்டி கல்லூரி ஏற்பாடு செய்த ‘75வது வயதில் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் ராகுல் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ராகுல் பேசியதாவது: இந்தியாவை நான் ஒரு தேசமாக அல்ல, ‘மாநிலங்களின் ஒன்றியமாக’ தான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநில மக்களும் அவர்களுக்கான சரியான இடத்தில் இருந்து, அழகான யோசனைகளை வழங்குவார்கள். அது ஒவ்வொரு இந்தியனின் இதயத்தை சென்றடையும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், பிரதமர் மோடி, நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் உள்ளடக்காத இந்தியாவை உருவாக்கி வருகிறார். இது நியாயமற்றது. இந்தியாவின் அடிப்படை கருத்துக்கே எதிரானது. நம்மைப் பொறுத்த வரை, இந்தியா பேசும்போதுதான் உயிர்ப்புடன் இருக்கும். அது அமைதியாகிவிட்டால் மடிந்துவிடும்.

இப்போது இந்தியாவில் மக்களை பேச அனுமதிக்கக் கூடிய அமைப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக அமைப்புகளை ஒரு கட்சி கைப்பற்றி வருகிறது. இதனால் உரையாடல்கள் நடக்கும் விதத்தை மறுவரையறை செய்து வருகிறது. இந்த பட்டியலில் இந்திய ஊடகங்களும் சேர்ந்துள்ளன. இந்து தேசியவாதம் என்கிறார்கள். உண்மையில் அதில் இந்துவும் இல்லை, தேசியவாதமும் இல்லை. இந்து மதத்தை பற்றி விவரிக்கும் அளவுக்கு விரிவாக படித்துள்ளேன். மக்களை கொல்லவோ, அடிக்க சொல்வதில்லை இந்து மதம். ஆர்எஸ்எஸ்சும், பிரதமர் மோடியும் இந்தியாவின் அடித்தள கட்டமைப்பையே ஆட்டிப் படைக்கிறார்கள். பெரும்பாலான மக்களை அவர்கள் ஒதுக்கி, மிக ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவரும் எம்பி.யுமான ஜெரிமி கார்பைனை லண்டனில் ராகுல் காந்தி சந்தித்தார். அந்த புகைப்படத்தை வெளிநாடு வாழ் இந்தியர் காங்கிரஸ் அமைப்பு டிவிட்டரில் வெளியிட்டது. ‘இந்தியாவுக்கு எதிராக பேசக்கூடிய, இந்தியாவை எதிர்க்கும் கருத்துடைய கார்பைனை சந்தித்ததன் மூலம், இன்னும் எத்தனை முறைதான் சொந்த நாட்டிற்கு எதிராக நடந்து கொள்ளப் போகிறார்கள்?’ என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, தனது டிவிட்டரில் பிரதமர் மோடியுடன் கார்பைன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘பிரதமர் மோடியும், கார்பைனின் ‘ஆன்டி-இந்தியா’ பார்வையை அங்கீகரிக்கிறாரா?’ என பதிலடி தந்துள்ளார்.

Related Stories: