ஞானவாபி மசூதி சர்ச்சை இஸ்லாமிய அமைப்பின் மனு முதலில் விசாரணை: வாரணாசி நீதிமன்றம் முடிவு

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாக சுவரில் இருக்கும் சிங்கார கவுரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதி கோரி, 5 பெண்கள் தொடர்ந்த வழக்கை வாரணாசி நீதிமன்றம் விசாரித்தது. மசூதிக்குள் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்தும்படி இதன் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நடந்த ஆய்வின்போது, மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஆய்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, வாரணாசி மாவட்ட மூத்த நீதிபதி விஷ்வேஷ் முன்னிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதிக்குள் வீடியோ ஆய்வு நடத்துவதை எதிர்க்கும் மனுவை முதலில் விசாரிப்பதா? அல்லது வழிபாடு நடத்தக் கோரிய மனுவை முதலில் விசாரிப்பதா? என்ற கேள்வி எழுந்தது. இறுதியில், மசூதி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, வீடியோ ஆய்வு நடத்தும் மனுவை விசாரிக்க நீதிபதி முடிவு செய்தார். அதன்படி, நாளை இந்த மனு விசாரிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: