2024 மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரசில் 3 குழுக்கள் அமைப்பு: சோனியா அதிரடி

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 9 பேர் கொண்ட அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ராஜஸ்தானின் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், 2024 மக்களவை தேர்தலையும், அதற்கு முன்பாக நடைபெறும் மாநில தேர்தல்களையும் வீரியத்துடன் சந்திக்க, அரசியல் விவகார குழு உட்பட 3 குழுக்களை கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். இதில் இடம் பெறும் தலைவர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் விவகாரக் குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக் விஜய சிங், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஜிதேந்திர சிங் என 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதே போல், மக்களவை தேர்தலை மையப்படுத்தி பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுக் குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ் ,கே சி வேணுகோபால், அஜய் மகேன், பிரியங்கா காந்தி வதேரா, ரன்தீப் சிங் சுர்ஜிவலா, சுனில் கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், கட்சியின் அமைப்பு தகவல் தொடர்பு மற்றும் செய்தித்துறை, வளர்ச்சி நிதி மற்றும் மேலாண்மை ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் சிந்தனை அமர்வு கூட்டத்தில் 6 குழுக்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தவும் பணிக்குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.  அதில், திக்விஜய் சிங், சச்சின் பைலட், சசிதரூர், ரவனீத் சிங் பிட்டு, கே.ஜே ஜார்ஜ், ஜோதி மணி, பிரத்யுத் போர்டெல்லோய், ஜிது பட்வாரி, சலீம் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 3 குழுக்களும் தனது பணியை உடனே தொடங்கும்படி சோனியா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: