அபிஷேக டிக்கெட் பெற்று தருவதாக கூறி ‘குகூள் பே’ மூலம் பக்தர்களிடம் இடைத்தரகர் ரூ.4.5 லட்சம் மோசடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அபிஷேக சேவை நடைபெறுகிறது. இந்த சேவையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த டிக்கெட்கள் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலமாகவும், ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்க் புக்கிங் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களில் ஒருவரே பல டிக்கெட் பெற்றனர். இதனால், ஒரு டிக்கெட் மட்டும் அவர்களுக்கு வழங்க மற்ற டிக்கெட் ரத்து செய்து குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவை சேர்ந்த 3 குடும்பங்களுக்கு 9 பக்தர்களுக்கு அபிஷேக டிக்கெட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.4.5 லட்சத்தை ‘‘குகூள் பே’’ மூலம் திருப்பதியை சேர்ந்த இடைத்தரகர் சரவணா என்பவர் பெற்று கொண்டுள்ளார். பணத்தை பெற்ற பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதுகுறித்து பணம் கொடுத்து ஏமாந்த பக்தர்கள் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விஜிலென்ஸ் அதிகாரிகளின் புகாரை வைத்து திருமலை 2வது நகர காவல்  நிலைய போலீசார் இடைதரகர் சரவணா மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: