×

வியக்க வைக்கும் ஓமம்

நன்றி குங்குமம் டாக்டர்  

நம் வாழ்வியல் முறையை சற்று திரும்பிப் பார்த்தால் ஓமம் பலவழியிலும் நம்முடன் இணைந்திருப்பது தெரியும். அதற்காக பண்டைய காலத்துக்குப் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. சராசரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே சில சம்பவங்களை நினைவு கூறலாம். அப்போது சிறு நகரங்களிலும் ஏன் கிராமங்களில் கூட சைக்கிளில் ஒரு பையை வைத்துக்கொண்டு அதில் கருப்பு நிற கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை வைத்துக் கொண்டு வீதிவீதியாக விற்பதை நாம் பார்த்திருக்க முடியும். வீட்டில் இருப்பவர்கள் உடனடியாக தங்கள் வீட்டில் இருக்கிற ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் ஓமக் குடிநீரை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு செரியாமை, பேதி ஏற்பட்டால் உடனடியாக பெற்றோர்கள் செய்வது இட்லி வேக வைக்கும்போது ஓமத்தை பொடி செய்து அதனை இந்த மாவின் மேல் தூவி வேக வைத்து அதனுடன் சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு செரிமானம் குறைவினால் ஏற்படுகின்ற பேதியை இது உடனடியாக கட்டுப்படுத்தும். மேலும் ஓம உப்பு, புதினா உப்பு இவற்றை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து காய்ச்சி வைத்துக் கொள்வார்கள். இதை உடல் வலியின்போது மேலே தடவிக் கொண்டால் சிறந்த வலி நிவாரணம் கிடைக்கும். அதே மாதிரி மூக்கு அடைத்துக் கொண்டாலும் சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும், இவற்றால் மார்பில் வலி ஏற்படும் பொழுதும் வலி இருக்கின்ற பகுதிகளில் தடவி வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வயது முதிர்ந்தவர் கூட உட்கொள்வதற்கு ஏதுவாக இருக்கிற ஒரு நொறுக்குத் தீனி என்று சொன்னால் அது ஓமப்பொடி ஆகும்.

பொதுவாக நொறுக்குத் தீனி என்றால் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் கலந்த பண்டங்களை அதிகமாக உட்கொள்கின்றனர். இதுபோல் அஜீரணம் ஏற்படுத்தாமல் எளிதாக ஜீரணம் செய்வதற்கு அவர்களுக்கு இலகுவாக கிடைப்பதற்கு இருக்கிற ஒரு நொறுக்குத்தீனி ஓமப்பொடி ஆகும். இது செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். எதனால் இது செரிமானத்திற்கு உதவுகிறது என்று பார்க்கப்போனால், இதில் இருக்கிற நறுமண எண்ணெயில் பெரும்பாலும் 50 சதவீதம் வரை தைமால் (Thymol) என்ற வேதிப்பொருள் காணப்படு வதைக் குறிப்பாக சொல்லலாம். இந்த தைமால் வேதிப்பொருள் நோய் ஏற்படுத்தும் நுண்கிருமிகளை கொல்வதற்கும், மந்தத்தை நீக்குவதற்கும் உதவியாக இருக்கிற காரணத்தினால் எளிமையாக செரிக்க வைக்கிறது என்று புரிய வரும். கிருமிநாசினி செயலும் இருக்கிற காரணத்தினால் குழந்தைகளுக்குச் செரியாமையால் ஏற்படுகின்ற பேதியும் நுண்கிருமிகளால் ஏற்படுகிற பேதி இரண்டையுமே கட்டுப்படுத்துகின்ற தன்மை இதற்கு உண்டு.

புதினாவில் இருந்து எடுக்கப்படுகின்ற மென்தால் மற்றும் ஓமவள்ளி ஓமம் மற்றும் தைம்(Thyme) என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவில விளையும் குறுஞ்செடியிலும் கூட இந்தப் தைமால் இருக்கிறது. தைமால் எப்படி உடலில் ஏற்படுகிற இசிவை(இழுப்பு நோய்) நீக்குகிறதோ அது போலவே சுவாசப்பாதையில் ஏற்படுகிற இசிவை போக்கக் கூடிய தன்மை இதற்கு இருக்கிறது. அதனால்தான் இதனை சுவாசத்தில்(Broncho spasm) அடைப்பு ஏற்படுகின்ற போதும் ஆஸ்துமா நோய் நிலையிலும் அதனை நீக்குகிற தன்மை இதற்கு உண்டு என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். அதனால்தான் ஓமம் சேர்ந்த மருந்துகள் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.

ஓமத்திற்கு சிறுநீரகப் பாதை நோயை குணப்படுத்தும் தன்மையும், கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிற தன்மையும் கூட இருக்கிறது. குருதியில் இருக்கிற கொழுப்பை குறைக்கும் தன்மை இருக்கிற காரணத்தினால்தான் ரத்தக்குழாய்களில் ஏற்படுகிற விறைப்புத்தன்மையை(Hardness- thickening) நீக்கி, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் இதில் காணப்படுகிறது. பொதுவாக வலி நிவாரணி தன்மையும் வீக்கம் உருக்கித் தன்மையையும் கூட ஓமத்தில் இருப்பதாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் வலி நிவாரணி மருந்துகளில் இது அடிப்படை மருந்தாக சேர்க்கப்படுகிறது.

ஓமத்திற்கு குருதி உறைதலைத் தடுக்கிற தன்மை இருக்கிற காரணத்தினால் மிக அதிக அளவில் அதனை பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் அந்த அறுவை சிகிச்சை காலத்தில் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. 2 முதல் 5 கிராம் வரை ஓமத்தை பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஆனால், அதற்கு மேல் பயன்படுத்துகிறபோது அது ரத்த உறைதலைத் தடுக்கும் தன்மை உடையதால் அறுவை சிகிச்சையின்போது ரத்தத்தை உறைய விடாமல் இருப்பதால் குருதிப்பெருக்கு அதிகமாக இருந்துகொண்டிருக்கும். எனவே, குருதிப்பெருக்கு அதிகமாக இருப்பவர்கள் ஓமத்தை பயன்படுத்தக்கூடாது. ஓமத்திற்கு இசிவை அகற்றுகிற தன்மை இருக்கிற காரணத்தினால் ஒரு முக்கியமான பயன்பாடு இருக்கிறது. என்னவென்றால் ராத்திரி படுக்கையில் தனக்குத் தெரியாமலே சிறுநீர் கழிப்பதற்கு ஒரு காரணம் சீரான முறையில் தசைகளின் செயல்பாடு இல்லாததே ஆகும்.

அதனை தடுத்து சிறுநீர்ப்பையின் அசைவுகளை கட்டுப்படுத்துகிற தன்மையும் ஓமத்திற்கு இருக்கிறது. எனவே, ஓமத்தை இவ்வாறு தொடர்ந்து 2 கிராம் அளவில் தினசரி பயன்படுத்தி வந்தால் அது குழந்தைகளும் முதியவர்களும் ஏற்படுகிற பெட் வெட்டிங் - தானாகவே தன்னை அறியாமலேயே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை(Bed wetting) தவிர்ப்பதற்கு உதவும். ஓமப்பொடி நொறுக்குத்தீனி என்று உணவிலும் கூட மருத்துவத் தன்மையை சேர்த்தே பயன்படுத்தி வந்த நம் பாரம்பரியத்தை இன்று நாம் மறந்துவிட்டோம். இவ்வளவு சிறிதாக இருக்கிற இந்த ஓமத்திற்கு இத்தனை பயன்களா என்று நாம் வியக்கிற அளவிற்கு ஓமத்திற்கான மருத்துவ பயன்கள் இருக்கிறது.

தொகுப்பு: விஜயகுமார்

Tags :
× RELATED கொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன?