தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

* முதல் நாளில் 3 சுயேட்சைகள் மனு தாக்கல்

* ஜூன் 31ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஏற்படும் 6 காலி இடங்களை நிரப்ப நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 3 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, ஜூன் 10ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அதன்படி, இந்த தேர்தலில் 4 இடம் திமுகவுக்கும், 2 இடம் அதிமுகவுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளனர்.

அதிமுகவில் மாநிலங்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவில் தென் மாவட்டத்திற்கு ஒரு சீட், வட மாவட்டத்திற்கு ஒரு சீட் என பிரித்து வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தலைமைக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் காரணமாக வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஆகி வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்புவதற்காக, நேற்று (24ம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் துணை செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, நேற்று முதல் வருகிற 31ம் தேதி வரை காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறையான 28ம் தேதி (சனி) மற்றும் 29ம் தேதி (ஞாயிறு) தவிர பிற நாட்களில் தாக்கல் மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீது ஜூன் 1ம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை ஜூன் 3ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 6 பேருக்கு மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், ஜூன் 10ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள, சட்டமன்ற குழுக்கள் அறையில் தேர்தல் நடைபெறும். 6 பேர் மட்டுமே போட்டியிட்டால், ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு போட்டியின்றி வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். முதல் நாளான நேற்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கே.பத்மராஜன், தர்மபுரி அக்னி ஸ்ரீராமச்சந்திரன், விருதுநகர் மன்மதன் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் வேட்புமனுவை அளித்தனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து இருக்க வேண்டும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்களுக்கு எம்எல்ஏக்கள் முன்மொழிய வாய்ப்பு இல்லை. இதனால் வேட்புமனு பரிசீலனையின்போது அந்த மனு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டு விடும். முக்கிய கட்சி சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களே ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

தோல்வியில் சாதனை

தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் தற்போது போட்டியிடுவது 230வது முறையாகும். குடியரசு தலைவர், எம்பி, எம்எல்ஏ, வார்டு உள்ளிட்ட அனைத்து தேர்தல்களில் இவர் மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வியை சாதனையாக்கி லிம்கா உள்ளிட்ட பல்வேறு சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். அதேபோன்று, மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஏ.கே.அந்தோணி, ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி, நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்து, அதன்மூலம் சாதனை படைத்துள்ளார்.

Related Stories: