பெட்ரோல், டீசல் விலை குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி 80க்கு விற்பனை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ₹110 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, பெட்ரோல், டீசல் விலை குறைவு காரணமாக நேற்று கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்து காணப்பட்டது. வழக்கமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா  ஆகிய மாநிலங்களிலிருந்து தினசரி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 90 வாகனங்களில்  1, 200 டன் தக்காளிகள் வந்த நிலையில், வரத்து குறைவால் 38 வாகனங்களில் 450  டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால்,  தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ₹8க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக ₹100 வரை உயர்ந்தது. இதனால், இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மேலும் விலை அதிகரித்து கடந்த 2 நாட்களுக்கு முன் கிலோ ₹110 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் நாட்டு தக்காளி கிலோ ₹100க்கும், பெங்களூரு தக்காளி கிலோ ₹110க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 40 வாகனங்களில் 600 டன் தக்காளிகள் குவிந்தது. பெட்ரோல், டீசல் விலை குறைவால் தக்காளி விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ பெங்களூரு தக்காளி ₹90க்கும், நாட்டு தக்காளி ₹80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை குறைவால் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், தற்போது தக்காளி வாகனங்கள் கூடுதலாக வருவதால் மேலும் தக்காளி விலை படிப்படியாக குறையும்,’’ என்றார்.

Related Stories: