மது போதையில் மரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் : வேலூரில் பரபரப்பு

வேலூர்: வேலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள மரத்தில் மதுபோதையில் ஏறிய ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு நேற்று மதியம் ஒருவர் வந்தார். அவர் திடீரென சட்டையை கழற்றி விட்டு, அங்குள்ள மரத்தின் மீது ஏறிக்கொண்டார். இதை பார்த்த போலீசார், அந்த நபரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு அவர், நான் தற்ெகாலை செய்து கொள்ளப் போகிறேன், எனது மனைவி, மகனை கடத்திச்சென்றுவிட்டனர். அவர்களை மீட்டு தர வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மரத்தில் ஏறி மீட்க முயன்றனர். ஆனால் அந்த நபர், கீழே குதித்தார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த நபர் வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த தண்டபாணி(40), ஆட்டோ டிரைவர் என்பதும், சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே வசிக்கும் 2 பேருக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் தண்டபாணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரை திரும்ப பெறக்கோரி தண்டபாணியின் மனைவி, குழந்தைகளை 2 பேர் கடத்தி சென்றுவிட்டதாகவும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தண்டபாணி தற்கொலைக்கு முயன்றது தெரிகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தண்டபாணி மதுபோதையில் இருந்தார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி, மகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் தண்டபாணியை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ஆனால் தண்டபாணி, தனது மனைவி, மகளை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என போதையில் தெரிவித்தார் என கூறினர். இதையடுத்து தண்டபாணைியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: