மயிலம் அருகே ஆட்டோ மீது கார் மோதி 2 பேர் படுகாயம் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரி தாக்கி கார் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்

* இரு பிரிவினர் மோதல் அபாயம்: போலீஸ் குவிப்பு

திண்டிவனம்: மயிலம் அருகே ஆட்டோ மீது ஊராட்சி மன்ற தலைவர் கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஊராட்சி தலைவரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் அவரது கார் கண்ணாடியையும் உடைத்தனர். அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் ராஜாங்கம் (50), ஊராட்சி மன்ற தலைவர். இவர் நேற்று இரவு பெரும்பாக்கம் கூட்டுபாதையிலிருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் ஏரிக்கரை வளைவில் திரும்பும்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அங்கு நின்றிருந்த பெரும்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மெய்யப்பன் மகன் ஏழுமலை (38) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (32), ஆகிய இரண்டு பேர் படுகாயமடைந்தனர். மேலும் கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் கார் கண்ணாடியை உடைத்ததுடன், ஊராட்சி மன்ற தலைவரையும் சரமாரி தாக்கியுள்ளனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல்நிலைய போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவரும், காயமடைந்தவர்கள் மற்றும் தாக்கியவர்கள் வேறு வேறு பிரிவினர் என்பதாலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: