குடந்தை கோயிலில் 10, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா அசூர் தான்தோன்றிஸ்வரர் கோயிலில் 10ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட சோழர் காலக் கல்வெட்டும், 14ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட பாண்டியர் காலக் கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக் குறித்து சரஸ்வதி மகால் நூலக நூல் விற்பனைப்பிரிவு எழுத்தர் நேரு அளித்த தகவலின்படி, ஆசூரைச் சேர்ந்த ரவி, கருப்பையன், ராமச்சந்திரன், கவுதமன் ஆகியோர் உதவியுடன் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கண்ணதாசன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் இக்கோயில் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், 10ம் நூற்றாண்டு கல்வெட்டில் சொற்கள் இரண்டிரண்டாக கொண்ட ஐந்து வரிகளில் உள்ளன.  நிலம், காவிதி, புத்தூர், அறுநாழி, சோழன் என்னும் சொற்கள் மட்டுமே வாசிக்கும் நிலையில் காணப்படுகின்றன. மற்றொரு கல்வெட்டு சிறிது சிதைந்துள்ளது. இதில்  கீழசுகூர் சபையைப் பற்றியும், இறைவன் பெயர் தான்தோன்றிஸ்வரர் என்பதில் …ன்றி மஹாதேவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரகாரம் எனப்படும் திருசுற்று புதியதாக அமைக்கப்பட்டது எனவும் இவ்விறைவருக்கு வழங்கப்பட்ட நிலமும், அதன் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் கீ என்னும் உயிர்மெய் நெட்டெழுத்து காணப்பெறுவது எழுத்து வளர்ச்சியில் சிறப்பு வாய்ந்ததாகும் என்றனர்.

Related Stories: