தந்தை சரமாரி அடித்துக்கொலை : மகன் வெறிச்செயல்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜோதிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன்-இந்திராணி தம்பதியின் மகன் கஜேந்திரன்(40). இவரது மனைவி சரஸ்வதி, மகன் சுரேஷ்(16), மகள் சுமித்ரா(15). சுரேஷ் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் கஜேந்திரனின் மாமியார் ஊரான திருவள்ளூர் மாவட்டம் ராஜாநகரம் மோட்டூரில் நடந்த திரவுபதியம்மன் கோயில் தீமிதி விழாவில் தீ மிதிக்க சுரேஷ் காப்பு கட்டியிருந்தார். விழாவின்போது பக்தர்களுடன் சுரேஷ் குளத்தில் குளித்தபோது திடீரென நீரில் மூழ்கி இறந்தார்.

விழாவுக்கு சென்ற இடத்தில் மகன் இறந்துவிட்டதால் சோகத்திற்கு ஆளான சரஸ்வதியும் சுமித்ராவும் சொந்த ஊருக்கு வராமல் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அதேபோல் சொந்த ஊரில் இருந்த கஜேந்திரனும் மகன் இறந்த துக்கத்தில் மனவேதனையில் இருந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் கடந்த வாரம் மாமியார் வீட்டிற்கு சென்ற கஜேந்திரன், மனைவி மற்றும் மகளை நேற்று காலை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். ஆனால் நேற்று மாலை சரஸ்வதி, மகள் சுமித்ராவுடன் மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதனால் மனவேதனை அடைந்த கஜேந்திரன், நேற்றிரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அங்கிருந்த தந்தை கன்னியப்பன், தாய் இந்திராணி ஆகியோரிடம், ‘எனது மனைவி அவரது தாய் வீட்டிற்கு செல்ல நீங்கள்தான் காரணம்’ எனக்கூறி தகராறு செய்தாராம்.

மேலும் ஆத்திரமடைந்த கஜேந்திரன், தந்தை கன்னியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த தாய் இந்திராணியையும் தாக்கினாராம். அப்போது கஜேந்திரனும் போதையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கன்னியப்பனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். ஆனால் வழியிலேயே கன்னியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்திராணி, கஜேந்திரன் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: