புதுகை அருகே தொழிலதிபரை கொன்று கொள்ளை 9 பேர் கும்பல் கைது: 160 பவுன் மீட்பு

அறந்தாங்கி: தொழிலதிபரை கொன்று கொள்ளையடித்த 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம்(58). முன்னாள் ஜமாத் தலைவரான இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆப்டிக்கல் ஷோரூம் வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார். இவரது மனைவி ஆயிஷா பீவி(48). இவர்களுக்கு ராஜாமுகமது(28), ஷேக் அப்துல் காதர்(25) என்ற மகன்களும், பர்கானா(26) என்ற மகளும் உள்ளனர். 2வது மகன் ஷேக் அப்துல் காதர், தந்தையுடன் ஆப்டிகல் ஷோரூமை நடத்தி வருகிறார். இவர்கள் சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

ரம்ஜான் நோன்புக்காக முகமது நிஜாம் ஊருக்கு வந்து தங்கினார். கடந்த ஏப்ரல் 24ம் தேதி இரவு 11 மணியளவில் முகமது நிஜாம், வீட்டுவாசலில் உள்ள வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், காம்பவுண்ட் சுவரில் ஏறி வீட்டுக்குள் குதித்தனர். பின்னர் முகமது நிஜாமை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதையடுத்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஆயிஷா பீவியை நாற்காலியில் கட்டி போட்டு விட்டு பீரோவை திறந்து 175 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து ெசன்றனர். இதுகுறித்து 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய ஷேக் முகமது யூனிஸ், யூசூப், கதிரவன், லோகேஸ், ஜெயபிரகாஷ் உள்பட 9 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 160 பவுன் நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: