வீடு, வீடாக தாவி தப்பியோடிய செல்போன் திருடன் சிக்கினான் : பெரம்பூரில் பரபரப்பு

பெரம்பூர்: செல்போன் திருடிக்கொண்டு வீடு, வீடாக தாவி தப்பியோட முயன்ற திருடனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (47). இவர் சிம்சன் கம்பெனியின் வேலை செய்து வருகிறார்.  நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தனது வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் குடும்பத்துடன்  தூங்கியுள்ளார். நள்ளிரவில், மொட்டை மாடியின் சுவர் வழியாக ஏறிய மர்ம நபர் ஒருவர், நாகராஜ் மனைவி தலைக்கு அடியில் வைத்திருந்த செல்போனை நைசாக எடுத்துள்ளார். அப்போது திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன், திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். இதனால் திருடன், செல்போனுடன் அங்கிருந்து ஓடி பக்கத்து வீடு, வீடாக தாவி தப்பியோடினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவிக.நகர் போலீசார் விரைந்துவந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த திருடனை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பெரம்பூர் தீட்டி தோட்டம் 4வது தெருவை சேர்ந்த சக்திவேல் (47) என்று தெரிந்தது. நபரை பிடித்து அவரிடம் இருந்து திருடப்பட்ட மொபைல் போனை கைப்பற்றினர். இதன்பின்னர் சக்திவேலை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: