திருமண ஆசை காட்டி ஏமாற்றினார் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி 4 வயது மகளுடன் இளம்பெண் தர்ணா

ராணிப்பேட்டை: திருமண ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய காதலனை திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண் ஒருவர் தனது மகளுடன் ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று ஒரு பெண், சிறுமியுடன் வந்தார். அவர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா அத்திதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா(24) என்பதும் உடன் வந்தவர் அவரது 4 வயது மகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து திவ்யா ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கும் கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அரிகிருஷ்ணன் எனக்கு திருமண ஆசை காட்டி நெருங்கிப் பழகினார். இதனால் எனக்கு மகள் பிறந்தாள். அதன்பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் சாதியின் பெயரைக் கூறி தட்டிக்கழித்து வந்தார்.

 மேலும் அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணை அரிகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய அரிகிருஷ்ணன் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனுவை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: