கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்

கர்நாடக: கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தில் ஆரிஸ், அல்மாஜ் பானு தம்பதி வசித்து வருகின்றனர் . அல்மாஜ் பானுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து அல்மாஜ் பானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருந்தன. இதனால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். இதில், 2 ஆண் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது தாயும், 4 சேய்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது இதுவே முதல் முறை என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அதுவும் 2 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை பிறத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

Related Stories: