விமான நிலையம் போன்ற அம்சங்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை: விமான நிலையத்தில் உள்ளது போன்ற அம்சங்களுடன் சென்னை எழும்பூர் ரயில்நிலையம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை, எழும்பூர் ரயில்நிலையம் மிக முக்கியமான ரயில்நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு 35 மெயின் லைன் மற்றும் 240 புறநகர் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. 24,129 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில்நிலையம் 2020-21ம் ஆண்டில் பயணிகளின் மொத்த வருவாயாக ரூ.125 கோடியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ரயில்நிலையத்தை மறுமேம்பாடு செய்வதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக உத்தேச தொகையாக ரூ.760 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது புறநகர் மெட்ரோ மற்றும் மின்சார  ரயில்களுக்கான பல்வகை போக்குவரத்து மையமாக செயல்படும்.

இதற்கிடையில் எழும்பூர் ரயில்நிலையத்தை விரைவில் மறுசீரமைப்பு செய்ய தெற்கு ரயில்வே தயாராகி வருகிறது. ஒன்றிய ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ், கடந்த வாரம் மறுசீரமைப்பு திட்டத்திற்கான திட்டங்களை ஆய்வு செய்தார்.  அப்போது தெற்கு ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) மல்லையா, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் மற்றும் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்மொழியப்பட்ட மறுமேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் உடனான இன்டர்-மாடல் இணைப்பைப் பற்றி விரிவாக விவாதித்தார்.

பிறகு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

எழும்பூர் ரயில் நிலையம், அதன் பாரம்பரியத்தை அப்படியே தக்கவைத்து அதன் வசதிகளை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மறுவடிவமைக்கப்படும். இந்த ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். அதாவது தனியான வருகை மற்றும் புறப்பாடு நடைபாதை, பிரகாசமான வெளிச்சம் மற்றும் எஸ்கலேட்டர்கள், லிப்ட் மற்றும் ஸ்கைவாக்குகள் மூலம் தளங்களுக்கு தொந்தரவு இல்லாத அணுகலை கொண்டிருக்கும். முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து நிலையங்கள் மறுவடிவமைக்கப்படும். மேலும் 9 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: