வேலூர் அருகே இன்று துணிகரம் நகைக்கடை சுவரை துளையிட்டு ரூ.85 லட்சம் நகைகள் திருட்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் அனில்குமார்(29). இவர் திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நகை விற்பனை மற்றும் அடகுகடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்று காலை அனில்குமார் நகைகடையின் அருகே உள்ள குளிர்பான கடையின் பின்பக்க சுவர் துளை போட்டுள்ளதை அங்குள்ள கடைக்காரர்கள் கண்டனர். இதுபற்றி அனில்குமாருக்கும், திருவலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து கடையின் ஷட்டரை திறந்து பார்த்தனர்.

அப்போது குளிர்பான கடையின் சுவரில் துளையிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்து நகைக்கடையின் சுவரையும் துளையிட்டுள்ளனர். பின்னர் அந்த துளையின் வழியே கடையின் உள்ளே புகுந்து இரும்பு லாக்கரை உடைத்துள்ளனர். அந்த லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ₹36 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்க நகைகள், ₹32 லட்சம் மதிப்புள்ள அடமான நகைகள், 30 கிலோ வெள்ளி, ₹30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ₹85 லட்சம் என தெரிகிறது.

நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் பின்புறமாக சென்று நகைக்கடையின் சுவரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியாததால் பக்கத்தில் உள்ள கூல்டிரிங்க்ஸ் கடையின் பின் பக்க சுவரை துளையிட்டு கடையின் உள்ளே நுழைந்த அவர்கள், கூல்டிரிங்க்ஸ் கடைக்கும், நகைக்கடைக்கும் இடையில் உள்ள சுவற்றை துளையிட்டு நகைக்கடையில் நுழைந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

நகைக்கடையினுள் மற்றும் கடையின் முன்புறம் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பதிவு செய்யும் கருவியை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை நடந்த சேர்க்காடு கூட்ரோடு ஆந்திராவின் எல்லைப்பகுதியில் இருப்பதால் ஆந்திர மாநில கொள்ளையர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா? அல்லது வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: