காஞ்சிபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி அடித்துக் கொலை: முட்புதரில் சடலங்கள் வீச்சு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கணவன், மனைவியை சரமாரியாக அடித்துக்கொன்ற கொலையாளிகள் சடலங்களை முட்புதரில் வீசிவிட்டு தப்பியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்தில் உள்ள ஏரிக்கால்வாய் முட்புதரில் இன்று காலை ஒரு ஆண், ஒரு பெண் சடலங்கள் கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த முட்புதரில் தனித்தனியாக ஆண், பெண் சடலங்கள் கிடந்தது தெரியவந்தது. அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே உள்ள புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம் (52), அவரது மனைவி ராணி (47) என தெரியவந்தது. இவர்களுக்கு சசிகலா என்ற மகளும், பெருமாள் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சசிகலா நர்சிங் படித்துள்ளார். அவருக்கு திருமணமாகி விட்டது. பெருமாள், டிப்ளமோ படித்துள்ளார். பிள்ளைகள் இருவரின் படிப்பு செலவுக்கும், மகளின் திருமண செலவு மற்றும் குடும்ப செலவுக்கு என பலரிடம் மாணிக்கம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தாராம். ஆனால் சரிவர மாத வட்டியை செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி பணத்தை திருப்பிக்கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இருவரும் விரக்தியுடன் இருந்தனராம்.

இந்நிலையில் நேற்று தங்கள் மகளிடம் போனில் தொடர்பு கொண்டு, ேசாளிங்கர் சென்று ஒருவரிடம் கடன் வாங்கி அக்கம்பக்கத்தில் வாங்கிய கடனை அடைப்பதாக தெரிவித்துவிட்டு தம்பதி இருவரும் புறப்பட்டனர். அதன்பிறகு இருவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருவரும் கைலாசபுரம் சாலை கிராமத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களது உடலில் ரத்தக்காயம் இருப்பதால், கடன் கொடுத்த யாரேனும் இவர்களை பின்தொடர்ந்து வந்து அடித்து கொலை செய்து முட்புதரில் வீசினார்களா? அல்லது வேறு யாராவது அடித்துக்கொலை செய்தார்களா?  என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராணியின் தாய் வீடு ைகலாசபுரம் சாலை கிராமம் என்பதும், அவரது சகோதரர் மின்னலான் என்பவர் பாமகவை சேர்ந்தவர், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் என்பதும் குறிப்பிடதக்கது. இச்சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: