மனைவி, மகன் வெட்டி கொலை; 8 ஆண்டுகளுக்கு பிறகு சூலூர்பேட்டையில் பதுங்கியிருந்த கணவன் துப்பாக்கி முனையில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

தண்டையார்பேட்டை: பிரிந்து சென்ற தகராறில் மனைவி, மகனை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவரை 8 ஆண்டுக்கு பிறகு துப்பாக்கி முனையில் போலீசார் சூலூர்பேட்டையில் கைது செய்துள்ளனர். தண்டையார்பேட்டை வஉசி நகர் 14வது பிளாக்கை   சேர்ந்தவர் குணசுந்தரி (27). இவருக்கும், மாரி (30) என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களது மகன் மகேஷ் குமார் (7). இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் மாரி இறந்து விட்டார். இதனால் குணசுந்தரி, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ் (எ) டேஞ்சர் ராஜ் (40) என்பவரை 2வதாக திருமணம் செய்தார். சூலூர்பேட்டையில் குடும்பம் நடத்தினர். இவர்களுடன் குணசுந்தரியின் மகன் மகேஷ்குமாரும் வசித்து வந்தார்.

ஒரு மாதம் குடும்பம் நடத்திய நிலையில் திடீரென ராஜிக்கும் குணசுந்தரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், ராஜ் திருணமானவர் என்பதும், அவருக்கு 2 மனைவிகள் என்பதும் அவர்களும் பிரிந்து சென்று விட்டார்கள் என்பதும் குணசுந்தரிக்கு தெரியவந்தது. இதனால் தகராறு வலுத்தது. ஆத்திரத்தில் ராஜியை விட்டு பிரிந்து, மகனை அழைத்து கொண்டு சென்னை தண்டையார்பேட்டை வஉசி நகரில் உள்ள தனது தாய் நாகவல்லி வீட்டுக்கு குணசுந்தரி வந்து விட்டார். இதனால் மனமுடைந்த ராஜி, தண்டையார்பேட்டைக்கு வந்து, குடும்பம் நடத்த வரும்படி குணசுந்தரியை அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் வராததால் ராஜ் கடும் ஆத்திரமடைந்தார். அப்போது, அக்கம் பக்கத்து வாலிபர்களுடன் குணசுந்தரி பேசியதால் ராஜ்க்கு சந்தேகம் ஏற்பட்டது. 15.11.2014 அன்று நடந்த தகராறில் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசுந்தரியை சரமாரி வெட்டினார். தடுக்க வந்த மகன் மகேஷ் குமாரையும் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினார்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை தேடி வந்தனர். தனிப்படை அமைத்தும் போலீசார் தேடினர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் ராஜ் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் விரைந்தனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ராஜ், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் போலீசார், ராஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். 8 ஆண்டுக்கு பிறகு கொலை குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: