கள்ளக்காதலை கைவிடாத மகனை கட்டையால் அடித்து கொன்ற தந்தை கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தேக்காட்டூர் குறிச்சிபட்டியை சேர்ந்தவர் முத்துபிறவி. இவரது மகன் குமரேசன்(30). இவருக்கும், இவரது மனைவி பிரதீபாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து இருந்தனர். இதனிடையே குமரேசன் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை தந்தை கண்டித்ததால் தந்தை, மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி மீண்டும் தந்தை மகன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் கோபமடைந்த முத்துபிறவி அருகிலிருந்த பனை மர கட்டையை எடுத்து முருகேசனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த குமரேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் நேற்று இறந்தார். இது பற்றி நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து முத்துபிறவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: