கொரோனா இறப்புகள் தொடர்காக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்கள் குழப்புகிறது!: ஒன்றிய அமைச்சர் அதிருப்தி

புதுடெல்லி: கொரோனா இறப்புகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிருப்தி தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் 75வது ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், ‘இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இறப்புகள் தொடர்பாக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்கள் குழப்பம் அளிப்பதாக உள்ளன. இந்தியாவின் கொரோனா இறப்பு புள்ளிவிபரங்களை உலக சுகாதார அமைப்பு புறக்கணித்துள்ளது.

அதேநேரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகள் மீது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளன. இந்திய பிரதமர் மோடி, கொரோனா பிடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு வர தேவையான உதவிகளை செய்தார். தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உலகளாவிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்’ என்றார். முன்னதாக இந்தியாவில் கொரோனா இறப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரண்டு வருடங்களில் 47 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் இறந்ததாக கூறியுள்ளது. ஆனால், இந்த அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. எதிர்கட்சிகள் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: