பேஸ்புக் நட்பால் வந்த வினை கூட்டு பலாத்காரத்தால் 14 வயது சிறுமி பலி: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கொலை மற்றும் போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் துபாக்கா அடுத்த ஜெஹ்தாவில் வசிக்கும் பிரியன்ஷு யாதவ் என்பவருக்கும், லக்னோவை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. கடந்த 5ம் தேதி இருவரும் அம்ரபாலியில் சந்தித்தனர். அங்கு பிரியன்ஷு மற்றும் அவரது நண்பர்களான மேலும் இரண்டு சிறுவர்கள் இருந்தனர். மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை மறைவான இடத்திற்கு இழுத்துச் ெசன்று பாலியல் பலாத்காரம் செய்தனார். மேலும் அந்த சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 ஒருவழியாக மூவரிடம் இருந்து தப்பித்த அந்த சிறுமி, தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். தனக்கு நேர்ந்த பலாத்கார கொடுமை குறித்து, தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவிக்கவில்லை. கடந்த 6ம் தேதி அந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்கள் சிறுமியிடம் தீவிரமாக விசாரித்ததில், அப்போது தனக்கு நேர்ந்த பலாத்கார கொடுமையை கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முக்கிய குற்றவாளியான பிரியான்சு யாதவை கைது செய்தனர். அவனது நண்பர்களான இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே உடல்நலப் பாதிப்புக்கு ஆளான அந்த சிறுமி, பல்ராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கிராம மக்கள் அவர்களது ஊரில் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் பாதுகாப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுப்போம் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியதால், போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

Related Stories: