தொடர்ந்து 2வது நாளாக மழை டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக வெப்பம் மக்களை வாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம், நேற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இடியுடன் கூடிய மழையின் காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. நகரின் சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும், பலத்த காற்றின் காரணமாக நகரின் 44 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலத்த காற்றுடன் (50 - 60 கிமீ) இடியுடன் கூடிய மழை பெய்வதால், அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சில விமானங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்பட முடியாமல், தாமதமாக புறப்பட்டு சென்றன. வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் டெல்லி-என்சிஆரில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் பிற விமான நிலையங்களுக்கு பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கூறியுள்ளது.

Related Stories: