போலி கையெழுத்து போட்டு நடிகையின் பெயரில் நகைக்கடன் பெற்று மோசடி: வங்கி மேலாளர், கணவர், மாமனார் மீது வழக்கு

மைசூர்: நடிகை சைத்ராவின் பெயரில் போலி கையெழுத்து போட்டு பல லட்சம் மோசடி செய்த புகாரில், அவரது கணவர், மாமனார், கிளை மேலாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கன்னட திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான சைத்ரா போத்ராஜ் என்பவர், ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் தனது கணவர் பாலாஜி போத்ராஜ், மாமனார் எம்.கே.போத்ராஜ் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘ஜெயலட்சுமிபுரத்தில் செயல்படும் வங்கியின் கிளை மேலாளருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எனது கணவரும், மாமனாரும் சேர்ந்து போலி கையெழுத்திட்டு மோசடி செய்துள்ளனர். ஜனவரி 2014 முதல் இந்த மாதம் வரையில், பல ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில், எனது மூன்று வருட வங்கி வரவு - செலவு அறிக்கையை சமர்பிப்பதற்காக, சம்பந்தப்பட்ட வங்கியை அணுகிய போதுதான் முழு விபரங்களும் தெரியவந்து.

எனது வங்கிக் கணக்கில் ​​தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி உள்ளனர். எனது கணவர் சுமார் 13 லட்சம் ரூபாய் அளவிற்கு நகைக் கடன் பெற்றுள்ளார். இதுதொடர்பாக வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்ட போது, எனது கணவர் மற்றும் மாமனார் மூலமாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்களால் எனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெங்களூரு நீதிமன்றத்தில் எனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்குகளுக்கு மத்தியில், தற்போது என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட வங்கியில் வைக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தரவேண்டும். எனது கணவர், மாமனார், வங்கி கிளை மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவரது புகாரின் அடிப்படையில், ஜெயலட்சுமிபுரம் போலீசார் ஐபிசி பிரிவு 466, 406, 409, 420, 506 உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கண்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: