குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரத்யேக சிகிச்சை வார்டு தயார்: மருத்துவமனை முதல்வர் தகவல்

மதுரை: குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இதற்கென பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது என மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் கூறியுள்ளார். குரங்கு அம்மை ஆபிரிக்க நாடுகளில் பரவக்கூடியா நோய். ஆனால் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் குரங்கு அம்மை தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்:

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தேசிய நோய் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதுவரை நாம்  கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவர்களையும், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து  கடந்த 21 நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த  பயணிகளில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டோர் அல்லது இந்நோய் இருக்கும் அறிகுறி இருப்போருடன் தொடர்பில் இருந்தோர் குறித்து தகவலறிந்தால் சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறவர்கள் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு குழுமத்தின், மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொற்று நோய் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அல்லது சிகிச்சை அளிக்கும்போது நடைமுறை அமல்படுத்தவேண்டும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி, கொப்புள திரவம் உள்ளிட்டவை என்ஐவி புனேக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும்.

அந்த ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் கடந்த 21 நாட்களுக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கணடறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு என பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

Related Stories: