காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி கடல் வழியாக படகுகளில் சென்று மீனவர்கள் இன்று போராட்டம்

பொன்னேரி: சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் எல்என்டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு வங்க கடலோரத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக பழவேற்காடு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து 1750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கல் பெரும்பலம், கோட்டைக்குப்பம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மீனவர்கள் ஒட்டு மொத்தமாக நேற்று மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் காட்டுப்பள்ளியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காட்டுப்பள்ளியில் உள்ள எல்என்டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் அருகே 500க்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவ கூட்டமைப்பை சேர்ந்தோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்த எஞ்சிய 1500 பேருக்கும் வேலை வழங்க வேண்டும், அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பழவேற்காட்டில் இருந்து காமராஜர் துறைமுகம் செல்லும் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அவர்களிடம் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் சாலை மறியல் செய்த 200க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் நேற்று மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக கடல் மார்க்கமாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பழவேற்காட்டில் இருந்து ஏராளமான மீனவர்கள் படகுகளில் சென்று காட்டுப்பள்ளி கடல் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: