பேச்சிப்பாறை அணையில் 916 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

நாகர்கோவில் : பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 916 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வந்தது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை கடந்தது. இதனை தொடர்ந்து அணையின் மறுகால் மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறையில் 6.8, பெருஞ்சாணி 4.4, புத்தன் அணை 4, பாலமோர் 3.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.12 அடியாக இருந்தது. அணைக்கு 707 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. வினாடிக்கு 916 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 53.25 அடியாகும். அணைக்கு 537 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 11.84 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 40 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 11.94 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது.

அணைக்கு 58 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.பொய்கையில் 17.80 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 24.36 அடியாகும்.

முக்கடல் அணை நீர்மட்டம் 8 அடியாகும். 4 அடியாக சரிந்த முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து நீர்வரத்து காரணமாக மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 9.5 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் 8.6 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

கன்னிப்பூ சாகுபடி பணி தீவிரம்

சமீபத்தில் பெய்த மழையால் அணைகள், பாசன குளங்களில் போதுமான தண்ணீர் உள்ளது.   இதனையடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுசீந்திரம் அக்கரை, பூதப்பாண்டி பகுதிகளில் நடவு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories: