இந்தோனேசியாவில் உயிரிழந்த மீனவர் உடல் குமரி வருகை-மீன்வளத்துறை அமைச்சர், எம்பி, எம்எல்ஏ அஞ்சலி

நித்திரவிளை : குமரி மற்றும் கேரள பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமான் தீவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி ஆழ்கடலில் விசைப்படகில்  மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மார்ச் 7ம் தேதி இந்த 8 மீனவர்களையும்,  விசைப்படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  இந்தோனேசியா கடற்படையினர் கைது செய்தனர். அதில் 4 மீனவர்களை சில நாட்கள் கழித்து விடுதலை செய்தனர். தூத்தூரை சேர்ந்த மரிய ஜெசின் தாஸ் (33), பூத்துறையை சேர்ந்த இம்மானுவேல் (29), திருவனந்தபுரம் வெட்டுதறை பகுதியை சேர்ந்த சிஜின் (29), மன்னாடு பகுதியை சேர்ந்த ஜோமோன் (24) ஆகிய 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.  

இந்நிலையில் கடந்த 10ம் தேதி மரிய ஜெசின் தாசுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா சிறை நிர்வாகம் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் ஒரு நாள் கழித்து    11ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதி மரிய ஜெசின் தாஸ் இறந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

   இந்நிலையில் இந்தோனேஷியாவில் இருந்து அவரது உடல் நேற்றுமுன்தினம் இரவு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  வரப்பட்டது. அங்கு நேற்று மதியம் உடற்கூறாய்வு முடிந்து உடல் நேற்று மாலை தூத்தூர் கொண்டு வரப்பட்டது. மரிய ஜெசின் தாஸ் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.  

சம்பவ இடத்திற்கு வருகை தந்த  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரிய ஜெசின் தாஸ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கூறியதாவது: இறந்த மீனவருக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்தோனேசியா சிறையில் உள்ள 3 மீனவர்களையும்  விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த், விஜய் வசந்த் எம்பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின்,  மீன்வளத்துறை உதவி இயக்குநர் காசிநாத பாண்டியன், உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து தூத்தூர் புனித தோமையார் கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: