இன்று குவாலிபயர் 1 போட்டி : பைனலுக்குள் நுழையப்போவது ராயல்சா? டைட்டன்சா?: ஈடன்கார்டனில் பலப்பரீட்சை

கொல்கத்தா: 10அணிகள் பங்கேற்ற 15வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ ஜெயன்ட்ஸ், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, மும்பை 5 முதல் 10 இடங்களை பிடித்து வெளியேறின. பிளே ஆப் சுற்று இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடைபெறும் இறுதி போட்டிக்கான குவாலிபயர் 1 போட்டியில் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத்-ராஜஸ்தான் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி பைனலுக்கு நேரடியாக தகுதிபெறும். தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்குள் 2வது அணியாக நுழையும்.

அறிமுக அணியான ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் லீக் சுற்றில், 10 வெற்றி 4 தோல்வி என 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியது. பேட்டிங்கில் பாண்டியா 413, சுப்மான்கில் 403, டேவிட் மில்லர் 381ரன் எடுத்துள்ளனர். விருத்திமான் சகா, ராகுல் திவேதியாவும் வலு சேர்க்கின்றனர். முகமது ஷமி, ரஷித்கான் தலா 18 விக்கெட் எடுத்துள்ளனர்.

பெர்குசன், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மறுபுறம் ராஜஸ்தான் லீக்கில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. ஜோஸ் பட்லர் 3 சதம், 3 அரைசதம் என  629 ரன் கேப்டன் சஞ்சு சாம்சன் 384 ரன் அடித்துள்ளனர். படிக்கல், ஜெய்ஸ்வால், ஹெட்மயரும் பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் சாஹல் 26 விக்கெட் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தக்க வைத்துள்ளார். போல்ட், பிரசித்கிருஷ்ணா, ஒபெட் மெக்காயும் நம்பிக்கை அளிக்கின்றனர். அஸ்வின் ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார். இரு அணிகளும் பைனலுக்குள் நுழைய மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

லீக் சுற்றில் கடந்த ஏப். 14ம் தேதி இரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. குஜராத் உத்தேசஅணி: சகா, கில், மேத்யூ வேட், ஹர்த்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், சாய் கிஷோர், பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி. ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), படிக்கல், அஸ்வின், ஹெட்மயர், ரியான் பராக், போல்ட், சாஹல், பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய்.

கொல்கத்தாவில் மழை மிரட்டல்

கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று மாலையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் 5 ஓவர் அடிப்படையில் ஆட்டம் நடத்தப்படும். அதற்கும் வழியில்லை என்றால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும். இதற்கும் வழியில்லாமல் போனால் லீக் சுற்றில் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் பைனலுக்கு தகுதி பெறும்.

Related Stories: