1 லிட்டர் பெட்ரோல் ரூ. 450 ஆக அதிகரிப்பு... இந்தியாவிடம் ரூ.38,000 கோடி கடன் கேட்க இலங்கை அரசு முடிவு!!

கொழும்பு : கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 450 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை முழுவதும் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை வேறு வழியில்லாமல் மறு பரிசீலனை செய்து உயர்த்தி உள்ளதாக இலங்கை எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின்னர் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 450க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ. 445க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்களில் முதல் 1 கிலோ மீட்டருக்கு 100 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 80 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 1 தடவைக்கு பைக் ஒன்றுக்கு 2,500 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப முடியும். 3 சக்கர வாகனங்களுக்கு ரூ. 3,000 வரையிலும் பிற வாகனங்களுக்கு 10,000 வரையிலும் எரிபொருள் நிரப்பலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் வாங்க வரிசையில் நின்று இருந்த போது, பெற்றோருடன் நின்று கொண்டு இருந்த 5 வயது குழந்தை பலியாகி உள்ளது.

இதனிடையே மேலும் 38,000 கோடி ரூபாயை இந்தியாவிடம் இருந்து கடனாக பெறுவதற்கான தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே மருந்து தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு உலக சுகாதார அமைப்பு இலங்கையுடன் இணைந்து செயல்பட உள்ளது. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர தேவைகள் குறித்து முன்னுரிமை அளித்து அவற்றை பெற்று கொள்வதற்கான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Related Stories: