கேமராவை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து துணிகரம் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி

சத்தியமங்கலம் : கண்காணிப்பு கேமராவை ஸ்டிக்கர் அட்டை ஒட்டி மறைத்து புஞ்சை புளியம்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகர்ப்பகுதியில் மாதம்பாளையம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. வங்கியின் முன்புறம் 2 ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அலாரம் ஒலிக்கும் சத்தம் வந்தது. இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் எழுந்து வந்து பார்த்தபோது ஒரு ஏடிஎம் இயந்திரம் கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து பொதுமக்கள் உடனடியாக புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் இருந்த ஒரு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது. உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்து, பணம் எதுவும் கொள்ளைபோகவில்லை என உறுதி செய்தனர். அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் பயந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனால் பல லட்ச ரூபாய் தப்பியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தது யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக ஈரோட்டில் இருந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

ஹெல்மெட் அணிந்தபடி வந்த கொள்ளையர்கள், ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்தவுடன் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஸ்டிக்கர் அட்டை ஒட்டி மறைத்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். சத்தி டிஎஸ்பி ஜெயபாலன் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: